இந்தப் பூவுலகில் நாம் நேரில் காண்கின்ற தெய்வம் எங்கள் அம்மாக்களே. அம்மாக்களின் கடமையுணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை, கோபமின்மை, அன்பு, ஆதரவு, பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பின்பற்றும் தன்மை, சமய வழிபாடுகள், கடின உழைப்பு, மன வைராக்கியம், ஏழ்மையிலும் தானம் என தொடரும் அவர்களின் குணாதிசயங்களை உலக அதிசயங்களாக பார்க்கின்ற அதே வேளையில் அவர்களை மனித குலத்தின் நியமப் புள்ளிகளாகவும் சித்தரிக்க விரும்புகின்றோம்.
அவர்கள் இளமைக் காலத்தில் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உங்களுக்காகவே அர்ப்பணித்து அதாவது “வாழும் போது செத்து செத்தபின்தான் வாழ்வார்கள்”. அவர்களின் நோக்கம், சிந்தனை, சொல், செயல் எல்லாமே பிள்ளைகளைப் பற்றியதாகவே அமையும். சோசலிசக் கொள்கை என்பது ஒரு தாய் தன்பிள்ளைகளை வேறுபாடின்றி எவ்வாறு பார்த்துக்கொள்கிறாள் என்பதில் இருந்து தான் உருவாகியிருக்கவேண்டும். அவ்வளவு பரிவான , பாகுபாடில்லாத அன்பும் சேவைகளும் அம்மாவிடமே இருக்கும்.
நீங்கள் வளரும் வரை அதாவது நிலையாகும் வரை பொருளாதார ரீதியில் நிலையில்லாமல் இருப்பீர்கள், பின்னர் நிலையாகும் போது எந்திர வாழ்வில் தொலைந்து விடுவீர்கள். மீண்டும் திருமணம் பார்க்கும் காலங்களில் அம்மாவுடனான பிணைப்பு பெண்/மாப்பிள்ளை பார்த்தலில் உருவாகும். அதன் பின்னர் அதுவும் குறைந்து உங்கள் வாழ்க்கையில் மூழ்கிவிடுவீர்கள்.
சிலர் ஒரே வீட்டில் இருப்பீர்கள் இன்னும் சிலர் வேறு வீட்டில், வேறு நகரத்தில் வேறு நாடுகளுக்கும் சென்றுவீடுவீர்கள். இது வாழ்க்கையின் போக்கு எனலாம் ஆனால் மேலாக வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வியையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
காலங்கள் ஓடும். வயதுகள் மாறும். முதுமை இருவரையும் துரத்தும். ஆனால் அம்மாவை குறைந்தது 20 வருடங்கள் முன்னே துரத்தும். அவர்கள் நோய் வாய்ப்படுவார்கள். பார்ப்பதற்கு பிள்ளைகளும் இருக்கமாட்டார்கள். கொடிது கொடிது தனிமை கொடிது அதனிலும் கொடிது முதுமையில் தனிமை. அதைக்கூட பிள்ளைகளிடம் காட்டாமல் கல்லுக்குள் ஈரமிருந்தும் அது கசியாததைப் போன்று இவர்கள் கண்களில் நீர் சிந்தாமல் தங்களை உள்ளகமாக எரித்து கடைசிவரை பிள்ளைகளுக்கென வாழ்ந்து முடிப்பார்கள்.
தூய மனம் உள்ளவர்கள் இதனை இடையிடையே சிந்திப்பார்கள். ஏதாவது செய்ய வேண்டுமென்ற சிந்தனை வந்து போகும். ஆனால் கால நீரோட்டத்தில் அது நாளை நாளையாக நலிவிழந்து போகும். ஆனால் யாக்கை நிலையாமைத் தத்துவத்தின் படி என்றோ ஒருநாள் அம்மாவின் ஆவி பிரியும். எல்லா இழப்பிற்கும் மேலான இழப்பு தாயின் இழப்பு. தாயை இழந்த சேயாய் உங்கள் நல்ல உணர்வுகள் உங்களை சந்தோசப்படுத்தும் உற்சாகப்படுத்தும். குற்ற உணர்வுகள் இருப்பின் அது உங்களைத் தினந்தினம் கொல்லும். அவ்வாறான குற்ற உணர்வுகளை வரவிடாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையே இந்த ஆக்கம் பரிந்துரை செய்கிறது. அனுபவம் , யதார்த்தம் , வெளிப்படையுண்மை , யாக்கை நிலையாமை , அன்பே சிவம் , கடமையுணர்வு , நன்றிக்கடன் , பெரியோரை கனம் பண்ணுதல் , போன்றவற்றை மனதில் வைத்தே இந்த ஆக்கம் எழுதப்பட்டது.
இதில் எத்தனை கேள்விகளுக்கு உங்களிடம் பதில் உள்ளன ? உங்கள் அம்மாவிற்கு பிடித்த சேலைநிறம் என்ன ? அம்மாவிற்கு பிடித்த உணவு எது ? அம்மாவிற்கு பிடித்த பழைய நண்பர் யார் ? அம்மாவின் தற்போதைய நண்பர் யார் ? அம்மாவிற்கு பிடித்த நடிகர் யார் ? தற்போதைய நிலைமையில் அம்மா சந்தோசமா செய்ய நினைப்பது என்ன ? எதை பற்றி அதிகம் கவலைப்படுகிறார் ? நீங்கள் கடைசியா பேசியது எப்போ? அம்மாவிற்கு பிடித்த கோவில் எது ? உங்களிடம் அம்மாவுக்கு பிடிக்காத குணம் என்ன ?
வாழும் போது செய்யக்கூடியவை
தெய்வங்கள் தமக்கென்று ஒன்றைக் கேட்கமாட்டார்கள். அதுபோல அம்மா இருப்பதால் அவரைத் தெய்வம் என்று நிறுவலாம். இன்னும் பலநிறுவல்கள் உள. ஆனால் அவற்றை உணர்ந்து, அனுபவத்தில் செய்ய வேண்டிய சில குறிப்புக்கள் கீழே.
- வயது போன காலங்களில் அவர் வாழ்வதற்கு வீடுமனை அல்லது அவர்களுக்குப் பிடித்த இருப்பிடங்களை வழங்குங்கள். முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் பற்றி - மௌனம் சாதிக்க விரும்புகிறோம்.
- அவர்களுக்கு தகுந்த உதவி, துணையில்லாதவிடத்து அதனை நீங்களே பொறுப்பாக நின்று ஒழுங்கு செய்து கொடுங்கள். இது பிள்ளைகளின் கடமை.
- அவர்களின் மருத்துவத் தேவைகளை, நோய்க்குறிப்புக்கள் , மருத்துவப் பதிவுகளை கவனமாகப் பார்த்து அதனை கவனித்து தேவையானவற்றை செய்ய வேண்டும். உங்களுக்கு நேரமில்லையாயின் இன்னொரு பொறுப்பானவரை அணுகி இதனை செய்து கொள்ளலாம். இதில் வரும் கவலையீனம் , அசமந்தப்போக்கு வாழ்வின் எல்லைக்கு இட்டுச் செல்லலாம்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் சேர்ந்திருத்தல், கிட்ட இருந்தால் தினமும் அவரைப் போய்ப் பார்த்தல் தொலைவில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருந்தால் நாள்தோறும் ஐந்து -பத்து நிமிடங்கள் அவருடன் கதைத்தல் என்பன மிகவும் நல்ல விடயங்களாகும்.
குறிப்பு: அம்மாவிடம் இருந்து வரும் அழைப்பை நேரமின்மை என்ற ஒற்றை வார்த்தைமூலம் தட்டி கழிக்கும் தருணங்களே அதிகமாகிப்போய்விட்ட காலத்தில் அந்தப்பிழைகளை நீங்கள் விடாதீர்கள். அது அவரின் கடைசி அழைப்பாகக் கூட இருக்கலாம். இறந்தபின் கடைசியாய் எப்போது கதைத்தோம் , கடைசியாய் யாரோடோடு பேசினார் என்று புலம்புவதனை இது தவிர்த்துக்கொள்ளும்.
- விசேட தினங்களில் குடும்பமாய் சென்று அத்தினத்தை அம்மாவுடன் கொண்டாடுங்கள். அவரை வணங்கி அவரின் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொள்ளத் தவறாதீர்கள்.
- வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் விசேட தினங்கள் பிறந்த தினத்திற்கு அம்மாவிற்கு ஒரு சேலை வாங்கிக் கொடுங்கள்.அதனை அத்தினத்தில் தரித்து குடும்பமாய் ஒரு படம் எடுக்க முடியுமானல் இன்னும் சிறப்பு.
- நாங்கள் பள்ளி நண்பர்கள் ஒன்றுகூடல் செய்வது, பழைய பாடசாலையை சென்று பார்ப்பது, போன்ற “ஆட்டோ கிராப்” சிந்தனைகள் அம்மாமாருக்கும் கண்டிப்பாய் இருக்கும். ஆகவே அவர்களுக்கும் அவ்வாறாக அவர்கள் சினேகிதர்களுடன் ஒன்றுகூடல், பழைய இடங்களுக்கு அழைத்து செல்லுதல், பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுதல், கோவில் மற்றும் சினிமாவிற்கு கூட்டி செல்லுதல், போன்ற விடயங்களை நேரம் கிடைக்கும் போது செய்யுங்கள்.
- உங்கள் சொந்த வீடு, வசிக்கும் இடம் , வசிக்கும் வீடு வேறாயின் நேரம் கிடைக்கும் போது குடும்பமாக சென்று சொந்த வீட்டை மற்றும் வீட்டின் சுற்றாடலைப் பார்ப்பது, அங்கே ஒரு நாள் சேர்ந்து உணவு சமைத்து உண்ணுவது போன்ற விடயங்களையும் செய்யலாம்.
- பழைய அம்மா காலத்து படங்களை எடுத்து உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அதை காட்டி கொள்ளாமல் அவருடன் சேர்ந்து பார்க்கலாம். இந்த நினைவுகள் இருவரையும் வாழ வைக்கும். அவருக்கு விருப்பமான பாடல்களை போட்டுவிடுவது அல்லது சேர்ந்து கேட்பது போன்ற விடயங்களையும் செய்யலாம்.
- வெளிநாடுகளில் வசிப்பவர்கள், வீடு வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு தரமாயினும் உங்கள் அம்மாவை அழைத்து அவருடன் சில நாள் வாழ்ந்து பாருங்கள்.அவருக்கும் நீங்கள் வாழும் வீட்டைப் பார்க்கும் ஆசை இருக்கும். இதனைச் சொல்லமாட்டார்கள் வேண்டாமென்று அடமும் பிடிப்பார்கள். ஆனால் செய்ய வேண்டியவைகளில் இதுவும் ஒன்று.
- அம்மாவை இந்தியாவின் முக்கிய கோவில்களுக்கு குடும்பமாக அழைத்துச் செல்லுங்கள். வசதி வாய்ப்பு இருப்பின் காசி, இராமேஸ்வரம் கூட்டிச் செல்லுங்கள்.
- அம்மாவுடன் சேர்ந்து சாப்பிட்டுப் பாருங்கள். அம்மாவுடன் சேர்ந்து தூங்கிப் பாருங்கள். இருவருக்கும் வயதானாலும் தன்தட்டில் இருந்து அப்பளத்தினை உங்கள் தட்டுக்கு போடுவதும், தூங்கும் போதும் கண்முழித்து உங்களுக்கு போர்வையை இழுத்து விடுவதோ, வியர்க்கும் போது விசிறி விடுவதும் இப்பிறப்பில் உங்களின் வரங்களின் பயன்கள் எனலாம்.
- அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத போது ஒரு முறை பல்துலக்கி, முகம் கழுவி மலசலம் கழிக்க உதவிப்பாருங்கள், குளிப்பாட்டுங்கள் இதனை வருட வருடங்களாக வாழ்நாள் முழுவதும் அவர் உங்களுக்கு செய்த அர்ப்பணிப்பு மனதைத் தொடும்.
- அம்மா இருக்கும் போதே அவருடைய வரலாறுகள், சுயசரிதைகளை கேட்டு எழுதிக் கொள்ளலாம். அத்துடன் வசதியுள்ளவர்கள் அதனை ஒலிஒளி வடிவில் பதிவு செய்தும் வைத்து கொள்ளலாம். ஒருவரின் தன்மையை வெளிப்படுத்த உருவத்துடன் குரலும் அவசியம். அம்மாவின் குரலை பதிவு செய்து வைத்திருத்தல் அவர் இல்லாத காலத்தில் பொக்கிசமாக அமையும்.
- இறப்பு உண்மையானது. யாக்கை நிலையில்லாதது. ஆன்மா அழியாதது. இதனை நேரம் பார்த்து கதைக்கலாம். இது சைவசித்தாந்தக் கொள்கைகளில் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இறுதி ஆசைகள் , மரணம் நேருமாயின் சடங்கு முறைகள் , சடங்கு இடங்கள் போன்றவற்றை முன்கூட்டியே கதைக்கலாம். எமது தாயிடம் நாங்கள் முழுவிபரத்தைனையும் பேசிமுடிவெடுத்தோம். சடங்குமுறை , நடைபெறும் இடம் , பாடைகட்டும் முறை மற்றும் பாடையில் போடும் மின்னொளி வரை உரையாடியிருந்தோம். அத்துடன் உடல் ஏரிநீறு காசியில் கங்கையில் கலப்பது , அந்தியேட்டி அழைப்பிதழ் வரை ஒரு திருமண விழாவிற்கு திட்டமிடுவது போல பேசிப் பகிர்ந்துகொண்டோம்.
- புலம்பெயர் நாட்டில் உள்ளவர்கள் மற்றும் விசா இல்லாமல் போக முடியாதவர்கள் உங்களால் இயலுமானவற்றை தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடோ அல்லது உறவினர்கள் , நண்பர்களின் உதவுகொண்டோ நிறைவேற்றலாம். மனமுண்டானால் இடமுண்டு அதுதான் உண்மை.
பார்த்தீபன் , பிரதீபன் , தர்ஷிகா
பிள்ளைகள் - சிவத்திருமதி.சிவநேசரத்தினம் குணரத்தினம்
பிற்குறிப்பு:
(1) நேரம் என்பது காலம். யமனுக்கு மறுபெயர் காலன். உங்களுக்கு நேரமில்லாமல் போகலாம் ஆனால் காலனுக்கு அது பொருந்தாது. இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
(2) வாழ்க்கையில் நேரமில்லை என்றொன்றில்லை. முக்கியத்துவம் தான் நேரத்தை தீர்மானிக்கும்.
(3) மனமுண்டானால் இடமுண்டு.
(4) சோம்பல் தவிர்
(5) நாளை என்பது இல்லை என்பதற்கு சமம்.